Thursday, 7 May 2015

இன்னுயிர்கள் காத்தருள்வாய்!
-சரவணன் இராமச்சந்திரன், பெந்தோங், பகாங்
விண்பறந்த வானூர்தி
     விந்தையாய் மறைந்ததுவே!
கண்மறைந்த காரணத்தை
     கண்டறிய முடிந்திலதே!
ஆழ்கடல்தான் கொண்டதுவோ!
     ஆழ்யாரும் கொண்டனரோ!
பாற்கடலில் பள்ளிகொள்ளும்
     பரந்தாமா பகர்ந்திடுவாய்!
எத்தனையோ தொழுகைகளாம்
     எத்திசையும் வேண்டுதலாம்
அத்தனைக்கும் நல்லவிடை                
     ஆத்தாநீ தரல்வேண்டும்!
வெவ்வேறாம் மதமெனினும்
     வெவ்வேறாம் இனமெனினும்
செவ்வையுற ஒன்றுபட்டுச்
      சிரம்பணிதல் கண்டருவாய்!
மண்ணில்தான் விழுந்தனரோ
      மாக்கடலில் அழுந்தினரோ
உண்ணாமல் வருந்தினரோ
      உறங்காமல் நலிந்தினரோ
ஒருவழியும் தோன்றாமல்
      உரைந்துபோய்க் கிடந்தனரோ!
இருவிழியும் பார்வையின்றி
      இருளிலே முடங்கின்ரோ!
சிறியவராம் மனிதரவர்
      பெரும்பிழைகள் செய்தாலும்
பெரியவன்நீ முதலவன்நீ
      பிழைபொறுக்க வேண்டுமா!
பெருமையெலாம் உடயவன்நீ
      பெருங்கருணை அருளவன்நீ
இருநூற்று முப்பத்தொன்பான்
      இன்னுயிர்கள் காத்தருள்வாய்!
விமர்சனம்: 
      கவிஞர் சரவணன் ராமச்சந்திரனால் எழுதப்பட்ட இன்னுயிர்கள் காத்தருள்வாய் எனும் கவிதையில் 370 விமானத்தின் நிலை என்னவென தெரியாமல் தவிக்கும் உற்றார் உறவினர்கள் மற்றும் மக்களின் மன நிலையைப் பற்றி கூறப்பட்டுள்ளது. கடலில் விழுந்ததா அல்லது மனிதர்களின் செய்கைகளின் காரணத்தினால் நிகழ்ந்ததா எனக் கேள்வி எழுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் வெவ்வேறான மதத்திலிருந்தும் இனத்திலிருந்தும் உள்ளனர். இதன் பாதிப்பு அனைவரையும் சென்றடைகிறது. குணங்களில் சிரியவராக இருக்கும் மனிதர்களின் தவறுகளை பெரியவனாகிய இறைவன் அவர்கள் மன்னித்து அவர்களை காத்தருள்வாய் என வேண்டுகிறார்.

 (..சிவம்)
தோட்டத்திலுள்ள  பழைய  வீட்டுக்குத்
திரும்ப வேண்டும்
பார்வைக்குத் தென்படாதெனினும்
உள் நுழைந்தால் உணரமுடியும்
எரிக்கப்பட்ட கித்தா கொட்டைகளின் தணலை
வீட்டைவிட்டு வெளியே வரமுடியாது
உள்ளேயே அடைந்து வாழ்ந்து
மக்கிப்போன
தாய்தந்தை தமக்கையின்
ஆகக்கடைசி சொற்களைப் பொறுக்குவதற்கு
திரும்பியே ஆகவேண்டும்
அதற்கு பின்னர்
என்ன வாழ்வு.
      விமர்சனம்:
எழுத்தாளர் ப.அ.சிவம் கைவண்ணத்தில் மலர்ந்த இந்த கவிதை எரிக்கப்பட்ட கித்தா(ரப்பர்) கொட்டைகளின் தணலை, உள்ளேயே அடைந்து வாழ்ந்த மக்கிப்போன வாழ்வு, என தோட்டப்புற வாழ்வுத் துயரத்தின் குறியீடாக கசியும் சொற்களின் சோகத்தை அங்கு வாழ்ந்தவர்கள் மட்டுமின்றி, இதனை வாசிப்பவகளும் உணரமுடிகிறது. அன்று அவர்கள் அடைந்த துயரத்தை நம்மால் உணரும் வண்ணம் அமைந்துள்ளது.

பேராசிரியர் தண்டாயுதம்
களஞ்சியம்

வந்தகத வாழ்ந்தகத - நம்ப
வயிறெரிஞ்சி போனகத
சுட்ட கருவாட்டுல
கஞ்சிய குடிச்சிக்குனு
காசு பணம் சேக்கலான்னு
கையடிச்சி கொண்டாந்தாங்க
*கொய்னாத் தண்ணிய குடிக்கவும் வச்சாங்க    
 சஞ்சிக் கூலிங்களுக்கு
சொர்க்கம் காட்டத்தான்
*பொற மலயில் தள்ளினாங்க
சொர்க்கமும் காணலைங்க
கொசுவால குடிச்ச மிச்சம்
கொள்ளையிலும் போனாங்க     

பகடியான வார்த்தையில
பால்மரத்தில் பணங் காய்க்கும்
ஆவடியில் முந்திக்கிட்டா
அதிஷ்டமும் தானே வரும்
இப்படியும் ஜாலாக்கு
எப்படியும் போட்டாங்க  
பொய்சொல்லி கப்பல் ஏத்தி
பொழப்பெல்லாம் போச்சுதுங்க
கருங்கடல தாண்டி வந்து
கைகட்டி நின்னோமுங்க
கல்பமும் உண்டுன்னு கையேந்தி ஊமையானோம் 
*(கொய்னா மலேரியா காய்ச்சலுக்கான மருந்து)  
விமர்சனம்:
      இந்த தொகுப்பில் பேராசிரியர் தண்டாயுதம் அவர்கள் (பொற மல - (புற மலை) –ன்று தமிழகத்திலிருந்து வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களைத் தங்க வைக்கும் இடம்) மற்றும் அவர்கள் அனுபவித்த துயரங்களையும் எடுத்துக் கூறும் வண்ணம் அமைந்தது.
      பலத் துயர்களைச் சமாளித்து அவர்கள் வாழ்க்கையை கடந்துள்ளனர். சஞ்சிக் கூலிகளாக வந்த அவர்களுக்கு சொர்க்கம் காட்டுவதாகக் கூறி ஏமாற்றினார்களாம். அப்படி எந்தவொரு சொர்க்கத்தையும் கானவில்லை அதற்கு பதிலாக துண்பமுற்றது தான் மிச்சம். ‘கைகட்டி நின்னோமுங்கஎன்பதில் அடங்கிப் பணியும் இயலாமையும்கையேந்தி ஊமையானோம்என்பதில் வழியும் கழிவிரக்கமும் கையாளாகத்தனமும்தான் அவர்களின் இயல்புகள் என தெரிகிறது.


சுதந்திரத்தாயே வணங்குகிறோம்
வே..அருச்சுணன்


31 ஆகஸ்டு 1957
இனிய வரவுக்காக
உன் திருமுகத்தைக்
கண்குளிரக் காண்பதற்கு
மூவின மக்களும் ஒன்றாய்க் கூடி
மெர்டேக்கா....மெர்டேக்கா என்றே
ஏழுமுறை நெஞ்சுக் குழியின் அடியிலிருந்து
உரக்கக் கூறி வரவு சொன்னோம்
எங்கள் உள்ளம் மகிழ்ச்சிக் கடலில்
மடைதிறந்த வெள்ளமாகியது..........!

அன்றுதான்
மக்கள் ஆனந்த கூத்தாடினர்
குடிசைகளிலும் மாடமாளிகைகளிலும்
மத்தாப்புச் சுடரொளி  வியாபித்தது
மக்களிடையே பேதமில்லை
மாற்றுக்கருத்துக்கும்  இடமில்லை
சுதந்திரத்தைச் சுவாசிப்பதற்கும் தவறவில்லை
புவியில்  வாழுமட்டும் பெற்ற
சுதந்திரத்தை நாளும் காத்திட
வளமுடனே  வாழ்வதற்கு
வழிதனைக் காட்டிடுவாய்
எங்கள் அன்புத்தாயே.........!

ஐம்பத்தாறு ஆண்டுகள்
பல்வேறு  சோதனைகள்
அணிகளாய்ப் பெற்றோம்
குள்ளநரிக் கூட்டங்கள் சில்லறையாய்ச்
சித்து விளையாட்டுக்கள் புரிந்தன
நீ தந்த வாழ்வுக்குத் தீதாய்க்
குண்டு வைத்தே தகர்க்க எண்ணியோர்
கூட்டம் புறமுதுகுக் காட்டிக்
கண்ணினின்றும் பதர்களாய்ப் பறந்து செல்ல
ஒற்றுமையால் வெற்றி கொண்டோம்.........!

தேசியக் கொடியில் மிளிரும்
வண்ணம் போல் மன ஒருமையால்
உலக மக்கள் பலருடனே
எண்ணத்தால் கூடிவாழ்கிறோம்
நன்மைகள் நித்தம்  பெறுகிறோம்
அரசும் மக்களின் நாடிபிடித்தே
நல்லாட்சி தருவதால்  வாழ்கிறோம்............!

இனிய நாளிலே
இதயம் மகிழ்ந்திடும் வேளையிலே
சுதந்திரத்தாயிடம் பணிவாய் ஒரு விண்ணப்பம்
மாசிருந்தால் மன்னித்திடுத் தாயே
மனதில் ஏதும் கலங்கமில்லை........!

நாட்டுக்காகக் குனிந்தவன்
நாடு வளர்ந்துவிட்டது
அன்று குனிந்தவன் இன்னும்
நிமிராமல் இருக்கிறான்
இவனுக்கு விமோசனமே இல்லையா.........?

தமிழர் வாழ்வில்
நலங்கள் சேர்க்கக்  கடைக்கண்
பார்வைதனைத் தாருமம்மா
ஏழையாய் வாழும் வினைதனை
விரைவாய்ப் போக்கிட உன்னருள்
பெற்றிடவே வேண்டுகிறோம்.........!
புண்ணிய நாட்டில்  புத்தனாய் வாழ்வதற்கு
வழியமைத்தத் தாயே வாழ்கவே
நாங்கள்  பெற்ற சுதந்திரமே வாழியவே!

விமர்சனம்:
       சுதந்திரத்தாயே வணங்குகிறோம் என்ற இந்த படைப்பில் வே.ம. அருச்சுணன் அவர்கள் சுதந்திரத்தைப் பற்றிப் பேசியுள்ளார். மெர்டெக்கா கிடைக்கும் பொழுது அவர்களிடையே இருந்த உணர்வைப் படிப்பவர்களுக்கு புரியும் வண்ணம் அமைந்திருந்தது. ஐம்பத்தாறு ஆண்டுகளாக அவர்கள் பலவாரான துயரங்களை அனுபவித்ததையும் பின் சுதந்திரம் கிடைத்தப் பின் அவர்களின் எதிர்ப்பார்ப்புக்ளைப் பற்றியும் கூறியிருந்தார். தேசியக் கொடியில் மிளிரும் வண்ணம் போல் மன ஒருமையால் உலக மக்கள் பலருடனே எண்ணத்தால் ஒன்றினைந்து இருப்பதாக கூறுகிறார். இதையெல்லாம் கூறிவிட்டு அவர் சுதந்திரத்தாயிடம் ஒரு விண்ணப்பம் விதிக்கிறார். அதாவது, நாட்டுக்காக அன்று குனிந்த தமிழர்களுக்கு விமோசனமே இல்லையா என வினவுகிறார்.

சீனி நைநா
எங்கே நீ இருக்கின்றாய் அம்மா?

அனைத்துயிர்க்கும் நேரில் வந்து கருணை செய்ய
ஆண்டவனுக் கியலாத காரணத்தால்
தனித்தனியே தாய் படைத்தான் என்று மக்கள்
தாய்க்குலத்தைப் புகழ்ந்துரைக்கக் கேட்டேன், ஆனால்
எனக்கு மட்டும் கருணைசெய்யக் குப்பைத் தொட்டி
ஏற்றதென ஏன்விடுத்துப் போனாய் அம்மா?
தனக்கெனவே வாழாத தாய்மை என்னைத்
தண்டிக்க என்ன பிழை நான் புரிந்தேன்?
பூனையென்ன நாயென்ன கொடுமனத்துப்
புலிகூட குட்டியொன்று போட்டுவிட்டால்
யானையெதிர் வந்தாலும் மகவைக் காக்க
இறக்கும்வரை போராட்டம் நடத்துமாமே
தானுணவுக் கலைந்தாலும் நிழலில் வைத்துத்
தன்சிசுவைப் பால்கொடுத்துக் காக்குமாமே
கானகத்துக் கொடுவிலங்கும் காட்டும் அந்த
கருணையுனக் கேன்இன்றிப் போனதம்மா?
விமர்சனம்:
     எங்கே நீ இருக்கின்றாய் அம்மா என்ற சீனி நைநா படைப்பில் ஒரு தாயைப் பற்றி கூறியுள்ளார். இறைவனுக்கு நிகராக அம்மாவைப் படைத்ததாகவும் அம்மா என்பவள் ஒருவருடைய வாழ்க்கையில் எவ்வளவு பெரிய சிறப்பு அம்சம் என்று புறியும் வண்ணம் இருக்கிறது. அம்மா இல்லாதவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும் என்பதும் விளங்குகிறது. அம்மாவின் பொருப்பின்மை காரணத்தால் ஒரு குழந்தையின் அவல நிலையைச் சித்தரிக்கிறது. அதோடு, ஒரு விலங்கினத்திற்கு தெரிந்த அந்த தாய்மையின் மகத்துவம் கூட மனித இனத்திற்கு தெரியவில்லையா என வினவுகிறார்.


No comments:

Post a Comment